ad b

வேர்டில் தேவையற்ற இடங்களில் கோடுகளை தவிர்ப்பது எப்படி?


















டேபிளில் வரிசையாக எண்களை அமைக்க: வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் 
வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.

இப்படியும் டெக்ஸ்ட் தேர்வு:
 வேர்ட் டாகுமெண்ட்டில் வேலை செய்கையில், டெக்ஸ்ட் தேர்வு செய்வது மிக எளிதான ஒன்றுதான். வரிசையாக வரிகள் என்றாலோ, அல்லது விட்டு விட்டு வரிகள் என்றாலோ, அவற்றைத் தேர்வு செய்துவிடலாம். ஆனால், நெட்டுவாக்கில் வரிகளில் சில எழுத்துக்களை மட்டும் தேர்வு செய்திட வேண்டும் என்றால் என்ன செய்வது?
எடுத்துக்காட்டாக, வரிசையான வரிகளில், பத்தாவது எழுத்து முதல், பதினைந்தாவது எழுத்துவரை, அனைத்து வரிகளிலும் மற்றவற்றை விட்டுவிட்டு, தேர்வு செய்திட வேண்டும் எனில் என்ன செய்வது? வேர்ட் இதனை மிக எளிதாக மேற்கொள்ள கீ போர்ட் மற்றும் மவுஸ் பயன்படுத்தும் வழிகளை நமக்குத் தருகிறது. இதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. எந்த டெக்ஸ்ட் பகுதியைக் காப்பி செய்திட வேண்டுமோ, அதன் மேல் இடது மூலைக்கு, கர்சரைக் கொண்டு செல்லவும். 


2. அடுத்து, கண்ட்ரோல் + ஷிப்ட்+ எப்8 (Ctrl+Shift+F8) அழுத்தவும். 


3. அடுத்து, கர்சர் கண்ட்ரோல் கீகளை, நீங்கள் காப்பி செய்திட விரும்பும் டெக்ஸ்ட் முழுமையும் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் மவுஸ் கொண்டு இதனைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். விரும்பிய டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நீங்கள் விரும்பிய செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். டெல் (Del) கீ அழுத்தினால், அந்த டெக்ஸ்ட் பகுதி முழுவதும் அழிக்கப்படும்.


தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க: 
வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும். தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் AutoFormat As You Type என்ற டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.

மெனு பட்டன்களை மாற்றி அமைக்க:
 நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ள மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம். இதற்கு முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.

டேபிளை முழுமையாகத் தேர்ந்தெடுக்க: 
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் அமைக்கப்பட்ட டேபிள் ஒன்றை முழுவதுமாகத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கையில் சில சிக்கல்கள் நேரலாம். டெக்ஸ்ட் மட்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். அல்லது உள்ளே அமைக்கப்பட்டுள்ள பார்மட்டிங் சமாச்சாரங்கள் கிடைக்காமல் போகலாம். இவற்றைத் தவிர்க்கக் கீழே தந்துள்ள குறிப்பின்படி செயல்படவும். தேர்ந்தெடுக்கப்படவுள்ள டேபிளின் உள்ளாகக் கர்சரை முதலில் நிறுத்தவும். நம் லாக் கீ இயங்காமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும். பின் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு நியூமெரிக் கீ பேடில் 5 என்ற எண் உள்ள கீயை அழுத்தவும். மவுஸ் பயன்படுத்தி டேபிளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டேபிளில் எங்காவது கர்சரை வைத்து மவுஸை இருமுறை கிளிக் செய்திடவும்.

டேபிளை இரண்டாகப் பிரிக்க: 
டேபிள் ஒன்றை உருவாக்கியபின் அதனைப் பிரிக்க எண்ணுகிறீர்களா? அதனைச் சாதாரணமாகக் கர்சர் கொண்டு சென்று பிரிக்க முயற்சித்தால், குறிப்பிட்ட படுக்கை வரிசை அகலாமவதைத்தான் பார்ப்பீர்கள். அதற்குப் பதிலாக, புதிதாய் அமைக்கப்பட வேண்டும் என விரும்பும் டேபிளில் முதல் வரிசையாய் எந்த வரிசை இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரை வைத்துப் பின் டேபிள் மெனு செல்லவும். அங்கு ஸ்பிளிட் டேபிள் என்பதில் கிளிக் செய்திடவும். டேபிள் இப்போது பிரிக்கப்பட்டு தனி டேபிள் ஒன்று காணப்படும்.

டேபிளில் பார்டர்களை நீக்க: 
வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றபடி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு ((Ctrl+Alt+U))கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.